மருதாணி
மருதோன்றி
வேறு பெயர் : மருதாணி , அழுவாணம் , மறுதோன்றி , ஐவணி
இதன் குணம் :
🎯தோல் நோய்களைக் குணமாக்கும். தோலில் தேமலை மறையச் செய்யும் .
🎯பேதியை உண்டாக்கும்
🎯முடி கறுக்கும்.
🎯முடி உதிராது.
🎯சொறி சிரங்கை நீக்கும் . குட்டநோய்களைக் குணமாக்கும்.
🎯மூட்டு வலிகளை நீக்கும்.
🎯நகச்சுற்றைப் போக்கும்.
மருதோன்றி(மருதாணி) சிறுமர இனத்தைச் சேர்ந்தது. இதன் இலைகள் பச்சை நிறமாகவும் உட்பக்கம் குழிவுள்ளனவாகவும் இருக்கும். இதன் பூக்கள் வெண்மை நிறமானவை. கொத்துக் கொத்தாக மலர்ந்து மணம் வீசும் .இதன் காய்கள் மூன்று மிளகுப்
பருமனுடையன.
மருதோன்றியின்(மருதாணி) இலை , மலர் , காய் , பட்டை , வேர் , அனைத் துமே மருத்துவத்திற்கு உதவுகின்றன . மருதோன்றி இலைகளைப் பிடுங்கி அம்மியில் வைத்து சந்தனத்தைப் போன்று அரைத்துக் கொண்டபின்னர் அதனைச் சுமங்கலிகளும், சிறுவர்,சிறுமியரும் தங்கள் கை , கால்களின் விரல்களிலும் உள்ளங்கைகளிலும் பூசிக்கொள்வர். பின்னர் அவை செக்கச் சிவப்பெனச் சாயமூறியிருக்கும். மருதோன்றியின் பச்சிலைச் சாறு உடல் வெப்பத்தில் காய்ந்ததும் சிவப்பாக மாறுவது இரசாயன மாற்றத்தின் விளைவென்றே கொள்ளவேண்டும்.
நுண்கிருமிகளைத் தாக்கியழிக்கும் சக்தி மருதோன்றி(மருதாணி) இலைச் சாற்றுக்கு உண்டு . விரல் நகங்களுக்கு மருதோன்றிச் சாற்றினைப் பூசுவதால் நகங்களுக்கிடையில் உள்ள அழுக்குகளில் கிருமிகள் தோன்றவிடாது தடுக்கிறது , நகச்சுற்று நோய் ஏற்படாது நகங்களைப் பாதுகாக்கிறது.
சரும நோய்களைத் தடுக்க மருதோன்றி(மருதாணி) இலைகளை நிழலில் உலர்த்தி இடித்துத் தூள்செய்து வைத்துக்கொள்வர் கரும்படை , சொறி , சிரங்கு நோயுள்ளவர்கள் இதனை நீரில்குழைத்து நோயுள்ள இடத்தில் தடவிக் காயவிட்டுப் பின்னர் 3 மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால் அந்நோய்கள் நீங்கும்.
வியர்வை நாற்றம் உள்ளவர்கள் மருதோன்றி இலையை நன்றாக இடித்து வடிகட்டி அதனுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக் குழப்புபோல் கரைத்து நீராடுவதற்கு முன் இதனைத் தேகத்தில் தடவி 10 நிமிடங்களின் பின் குளிக்கலாம் . தொடர்ந்து இங்ஙனம் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும்.
சொறி சிரங்கு உள்ளவர்கள் மருதோன்றி(மருதாணி) இலையை நிழலில் உலர்த்தி , குப்பைமேனியையும் நிழலில் உலர்த்தி இரண்டையும் ஒன்றாக இடித்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இவற்றைச் சந்தனம்போல் குழைத்து சம்பந்தப்பட்ட இடங்களில் பூசிவந்தால் ஒருவாரத்தில் அவை குணமாகும்.
தலைமுடி வளர்வதற்கு மருதோன்றி(மருதாணி) இலைகள் பெரிதும் பயன்படுகின்றன . மருதோன்றி இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலம் முடி வளர்தலைத் தூண்டுவதுடன் முடி உதிர்வதைத் தடுக்கிறது.
மருதோன்றிப் பூக்கள் நறுமணம் மிக்கன. இவற்றை தலையில் வைத்துக்கொண்டு மங்கையர் நித்திரை செய்யக்கூடாதென நம் முன்னோர் கூறியுள்ளனர் .
மருதோன்றிக் காய்கள் கொத்துக்கொத்தாகக் காய்த்திருக்கும் . இவற்றை கொத்தாகப் பறித்து வந்து வீடுகளில் நிலை வாசலில் தலைக்கு மேல் படாதவாறு கட்டிவைப்பர் . இதனால் வீட்டில் துட்ட தேவதைகள் நடமாடமாட்டாவென்றும் திருமகளின் திருக்கண் நோக்குக் கிட்டுமென்றும் நம்புகின்றனர்.
மரு தோன்றிக் காய்களைத் தூளாக்கி சாம்பிராணியுடன் கலந்து தூப மிடும் வழக்கமும் உண்டு.
மருதோன்றியின் வேர் , பட்டை ஆதியனவற்றை அரைத்துத் தூள் செய்து பூசிவந்தால் வெண்குட்டம் , தேமல் போன்றவை குணமாகும் . சித்தவைத்தியத் துறையில் உலோகங்களைச் செந்தூரமாக்கு தற்கு மருதோன்றிச் சாறு பயன்படுத்தப்படுகிறது.