குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை
சித்திரை மாதம் 9 ஆம் தேதி (22.04.2023) சனிக்கிழமை அன்றைய உதயாதி நாழிகை 43.30 அதாவது இரவு 11:27 மணிக்கு மீன ராசி ரேவதி நட்சத்திரம் 4 ஆம் பாதத்திலிருந்து மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் 1 ஆம் பாதத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். |
மேஷம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
மேஷ ராசி அன்பர்களே,
மேஷ ராசியிலிருந்து ஒன்பதாவது இடமான தனுசு ராசிக்கும் பன்னிரண்டாவது இடமான மீன ராசிக்கும் உரியவர் குரு பகவான். இதுவரை மேஷ ராசிக்கு பன்னிரண்டாவது இடத்தில் அமர்ந்திருந்த குரு பகவான் தற்போது உங்கள் ஜென்ம ராசியான மேஷ ராசிக்கு வருகிறார்.
மேஷ ராசிக்கு ஜென்மத்தில் குரு வந்தால் குரு பகவானின் விசேஷ பார்வைகளால் உங்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் மற்றும் பித்ரு ஸ்தானம் போன்ற பாவகங்களில் நன்மை ஏற்படும்.
குரு பகவானின் விசேஷ பார்வைகளால் இந்த ஒரு வருட காலத்தில் உங்களது உழைப்புக்கு ஏற்ற உயர்வுகள் ஏற்படும்.
இதுவரை உங்களது பணியிடத்தில் நிலவி வந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி உங்களுக்கு நன்மை ஏற்படும். இது மட்டுமல்லாமல் மேலதிகாரிகளின் பாராட்டும் அதன் மூலம் ஆதாயமும் உங்களுக்கு கிடைக்கப்பெறும்.
இந்த காலகட்டத்தில் சரியான திட்டமிடல் மற்றும் நேரம் தவறாமை கடைப்பிடித்தால், நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுகள் மற்றும் உங்களது வாழ்க்கைக்கான பல நன்மைகளை எளிதில் பெறலாம். கோப்புகளில் கையெழுத்திடும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.
மாணவர்கள் சோம்பலை விரட்டி அன்றாட பாடங்களை அன்றே படிப்பது நன்மை பயக்கும்.
மாணவர்கள் வெளிநாட்டு கல்வி, கல்வி உதவித்தொகைகள் பெற, பெற்றோர்களின் வழிகாட்டுதலை கேட்டு நடப்பது நன்மை பயக்கும்.
மேஷ ராசி அன்பர்கள் இந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்ல முயற்சி செய்தால் அதற்கான வாய்ப்புகள் அமையும்.
மேஷ ராசியினர் இந்த காலகட்டத்தில் சோம்பலை விரட்டினால் சோதனைகளும் தானாகவே விலகி விடும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை பிரிந்திருந்த உறவுகள் திரும்ப வருவார்கள்.
நீங்கள் குதர்க்கமாக பேசுவதையும் குத்திக் காட்டுவதையும் அறவே தவிர்த்தால் அன்பும் அரவணைப்பும் உங்களுக்கு நிலைக்கும்.
இந்த காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு அவர்களது வாழ்க்கைத் துணையுடன் அன்னியோன்யம் அதிகரிக்கும்.
மேஷ ராசியினருக்கு இதுவரை சுப காரியங்களில் ஏற்பட்டு வந்த தடைகள் விலகி நன்மை ஏற்படும்.
மேஷ ராசியினருக்கு ஆடை, ஆபரணம் சேரும். அசையா சொத்து வாங்கும் சமயங்களில் நீங்கள் மிக கவனமாக இருத்தல் அவசியம். குடும்ப ரகசியம் எதையும் பொதுவெளியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
இதுவரை திருமணம் நடக்காமல் தடைப்பட்டு கொண்டிருந்த மேஷ ராசியினருக்கு திருமண முயற்சிகள் வெற்றியடைந்து திருமணம் நடந்து விடும்.
இதுவரை குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் குழந்தை பேறு கிட்டும்.
மேஷ ராசியினருக்கு செய்யும் தொழிலில் படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். புதிய தொழில் அமைப்புகளில் பிறரை நம்பாமல் இருப்பது நன்மை பயக்கும்.
மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம் கிட்டும்.
உங்களது வண்டி வாகனத்தில் சிறு பழுது ஏற்பட்டாலும் உடனே சரி செய்வது நல்லது.
மேஷ ராசியினரில் ஒரு சிலருக்கு அடிவயிற்றில் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை, கழிவு உறுப்புகள், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது நன்மை பயக்கும்.
பலன் தரும் பரிகாரங்கள்
- மேஷ ராசியினர் இந்த காலகட்டத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது நன்மை பயக்கும். நண்பர்களே, முடிந்தால் மாதம் ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.
- ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் இந்த குரு பெயர்ச்சியினால் உங்களுக்கு ஏற்படும் சிறப்பான பலன்களை எளிதில் நீங்கள் அடையலாம்.
ரிஷபம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
ரிஷப ராசி அன்பர்களே,
உங்களது ராசிக்கு 8 மற்றும் 11ஆம் இடங்களுக்கு உரியவரான குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான விரைய ஸ்தானத்திற்கு வருகிறார்.
குரு பகவானின் விசேஷ பார்வைகளினால் உங்களது ராசிக்கு நாளாமிடமான சுகம் மற்றும் தாய் ஸ்தானம் மற்றும் ஆறாம் இடமான சத்ரு ரோக ஸ்தானம் மற்றும் எட்டாமிடமான ஆயுள் ஸ்தானம் ஆகியவை பலம் பெறும்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் முயற்சி செய்தால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். முயற்சியை கைவிடாதீர்கள்.
செய்யும் தொழிலில் படிப்படியாக உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
பிறர் தவறை பெரிதுபடுத்துவதற்கு முன்பு உங்களது குறைகளை சரி செய்ய பழகிக் கொள்ளுங்கள் உங்களது உயர்வுகள் உறுதியாகும்.
எலும்பு தேய்மானம், நரம்பு, ரத்த நாள உபாதைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இரவு நேரங்களில் தொலைதூரத்தில் பயணம் செய்ய வேண்டாம்.
மாணவர்கள் கவனத்தை சிதறடிக்காமல் படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம்.
நீங்கள் புதிய முதலீடுகளை செய்யும் முன் பலமுறை யோசித்து செய்வது நன்மை பயக்கும்.
எல்லாம் தெரியும் என்கின்ற மன நிலையிலிருந்து வெளியே வாருங்கள். அப்போதுதான் உங்களது வாழ்வில் வெற்றி கிட்டும்.
கலைத்துறையினருக்கு அவர்களது முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும். நீங்கள் அனுபவத்தை பாடமாக வைத்து உங்களுக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.
அரசு மற்றும் அரசியல் சார்ந்த துறையினர் எதையும் நிதானமாக செய்வதும் மற்றும் ஒவ்வொரு வார்த்தைகளையும் யோசித்துப் பேசுவது நன்மை பயக்கும்.
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எண்ணம் போல் வாழ்க்கை அமையும். அதனால் எண்ணத்தில் கவனம் தேவை.
பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
அருகில் வசிக்கும் நண்பர்களிடத்தில் எல்லை வகுத்து பழகுவது நன்மை பயக்கும்.
பூர்வீக சொத்துக்களில் அலட்சியமாக இருக்காதீர்கள். உங்களது குடும்ப பிரச்சினைகளில் மூன்றாம் நபர் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள்.
சுப காரியங்களில் வீண் ஆடம்பரத்தை குறைப்பது நன்மை பயக்கும். கடன்களை முறையாக திருப்பி செலுத்துவது நன்மை பயக்கும்.
பலன் தரும் பரிகாரங்கள்
- ரிஷப ராசியினர் அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள்.
- ஒருமுறை காணிப்பாக்கம் சென்று விநாயகப் பெருமானை வணங்கி வாருங்கள். உங்களது வாழ்வில் வெற்றி கிட்டும்.
மிதுனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
மிதுனம் ராசி அன்பர்களே,
மிதுன ராசியினருக்கு குரு பகவான் 7ஆம் இடத்திற்கும் மற்றும் 10ஆம் இடத்திற்கும் உரியவர். தற்போது இந்த குரு பெயர்ச்சியினால் உங்களது ராசிக்கு பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார்.
குரு பகவானின் விசேஷ பார்வைகளால் உங்களது ராசிக்கு மூன்றாம் இடமான சகோதர ஸ்தானம் மற்றும் ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானம் மற்றும் ஏழாம் இடமான களத்திர ஸ்தானம் ஆகிய பாவகங்கள் நன்மை பெறும்.
இந்த காலகட்டம் உங்களுக்கு தன்னம்பிக்கையையும் மற்றும் தைரியத்தையும் அளிக்கும் காலமாக அமையும்.
மிதுன ராசியினர் இந்த காலகட்டத்தில் தலைக்கனம் இல்லாமல் அமைதியாக இருப்பது நன்மை பயக்கும்.
வண்டி வாகனத்தில் எச்சரிக்கை தேவை.
விலை உயர்ந்த பொருட்களை இரவலாக தருவது மற்றும் பெறுவது ஆகியவற்றை தவிர்ப்பது மிதுன ராசியினருக்கு நல்லது.
உங்களது தொழிலில் வளர்ச்சி ஏற்படும். உங்களது செயலுக்கு ஏற்ற உயர்வினை நிச்சயம் அடையலாம்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். அதே சமயத்தில் தவறான வழிகாட்டலால் வாய்ப்புகள் உங்களது கையை விட்டும் போகலாம். கவனமாக இருங்கள்.
யாருக்கும் வாக்குறுதி அளிப்பதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் தேடி வரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை உங்களது வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த பிரிவு நிலை மாறும்.
இதுவரை திருமணம் ஆகாத மிதுன ராசியினருக்கு திருமணம் கைகூடும். மிதுன ராசியினருக்கு குழந்தை பேறு கிட்டும்.
வேலை செய்யும் இடத்தில் இதுவரை பட்ட கஷ்டங்கள் நீங்கி நன்மை ஏற்படும்.
மூன்றாம் நபர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அவர்கள் செய்யும் தவறுகளை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களது பொன்னான நேரத்தையும் வேலையையும் விட்டு விடாதீர்கள்.
படித்து முடித்துவிட்டு அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு பதவி கிடைக்கும். இந்த சமயத்தில் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தையும் கடமைக்கு செய்யும் செயல்களையும் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
முதுகுத்தண்டு பிரச்சனைகள், காது, மூக்கு, தொண்டை உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை.
பலன் தரும் பரிகாரங்கள்
- மிதுன ராசியினர் அருகில் இருக்கும் மகான் கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள். முடிந்தால் ஒருமுறையாவது மந்திராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திரரை தரிசித்து வாருங்கள். உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றி கிட்டும்.
கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
கடகம் ராசி அன்பர்களே,
கடக ராசியினருக்கு ஆறாம் இடத்திற்கும் மற்றும் ஒன்பதாம் இடத்திற்கும் உரியவர் குரு பகவான். கடக ராசியினருக்கு தற்போது பத்தாமிடமான தொழில் ஸ்தானத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.
குரு பகவானின் விசேஷ பார்வைகளால் உங்களது ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானம் மற்றும் நான்காம் இடமான மாத்ரு ஸ்தானம் மற்றும் ஆறாம் இடமான சத்ரு ரோக ஸ்தானம் ஆகிய பாவகங்களில் நன்மை ஏற்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தாய் வழி உறவினர்களிடத்தில் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொது இடங்களில் குடும்ப ரகசியத்தை பற்றி பேசாமல் இருப்பது நல்லது.
பூர்வீக சொத்துக்களினால் ஆதாயம் ஏற்படும்.
உங்களது வார்த்தைகளில் கவனம் தேவை.
இதுவரை உங்களுக்கு மறைமுக எதிரிகளால் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கி உங்களுக்கு நன்மை ஏற்படும்.
மாணவர்கள் சோம்பலை தவிர்த்து படிப்பது நன்மை பயக்கும். மறதிக்கு மறந்தும் இடம் தராதீர்கள்.
இந்த காலகட்டத்தில் எதிலும் கவனம் மற்றும் நேர்மை மிக அவசியம் தேவை.
உழைக்க தயங்காமல் இருந்தால் உயர்வும் தயங்காமல் உங்களை வந்தடையும்.
தொழிலில் முதலீடு செய்வதில் கவனம் தேவை. தவறான வழிகாட்டலால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு வளர்ச்சி ஏற்படும். கிடைக்கும் வாய்ப்பில் பெரிது சிறிது பார்க்காமல், அலட்சியம் செய்யாமல் அதை செயல்படுத்துவது உங்களது எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாக அமையும்.
உங்களது தொழிலில் அல்லது பணியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போட்டி, பொறாமை, வேலையில் பிரச்சனை, இடம் மாறுதல் போன்றவை ஏற்படும். மனதை நிதானமாக வைத்து உங்களது தொழில் அல்லது பணியில் செயல்படுங்கள். தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்த்திடலாம்.
கடக ராசியினருக்கு அஜீரணம், உணவுக் குழாய் பாதை, தலைவலி பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கர்ப்பிணி பெண்கள் உரிய சிகிச்சைகளில் கவனமாக இருக்கவும். உடல் நலத்தில் கவனம் தேவை.
பலன் தரும் பரிகாரங்கள்
- கடக ராசியினர் சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.
- உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். உங்களது வாழ்க்கையில் மாற்றமும் முன்னேற்றமும் நிச்சயம் நிகழும்.
சிம்மம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
சிம்மம் ராசி அன்பர்களே,
சிம்ம ராசியினருக்கு ஐந்தாம் இடத்திற்கும் மற்றும் எட்டாம் இடத்திற்கும் உரியவர் குரு பகவான்.
சிம்ம ராசியினருக்கு தற்போது குரு பகவான் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு செல்கிறார்.
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும்.
செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். புதிய முதலீடுகளில் முறையான ஒப்பந்தமும், எச்சரிக்கையான செயல்பாட்டையும் மேற்கொள்வது நன்மை பயக்கும். ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் போன்ற துறைகளில் செயல்படுபவர்கள் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்று.
கலைத்துறையினருக்கு உங்களது திறமைக்கேற்ப இந்த சமயத்தில் உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்க பெறும்.
சிம்ம ராசியினருக்கு ஆடை, ஆபரணம் சேரும். நிலம் சார்ந்த சொத்துக்களை வாங்குவது விற்பதில் கவனம் தேவை.
பூர்வீக சொத்து வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
இதுவரை உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். உங்களது பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.
மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். படித்ததை ஒரு முறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது நல்லது. மாணவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோர்,ஆசிரியர் வழிகாட்டலை கேட்டு நடப்பது நல்லது.
இதுவரை வீண் பழிக்கு உள்ளான சிம்ம ராசியினருக்கு பிரச்சனைகள் தீர்ந்து நன்மை ஏற்படும்.
மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
உங்களது மேலதிகாரிகள் உங்களை நம்பி தரும் பணிகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.
திடீரென்று உணர்ச்சிவசப்படுவதும் மற்றும் கோபமான வார்த்தைகளை உபயோகிப்பதையும் தவிர்ப்பது நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நாவடக்கம் மிக முக்கியம்.
இந்த காலகட்டத்தில் விருந்தினர்கள் அதிகம் உங்களுடைய வீட்டிற்கு வருவார்கள். மறந்தும் கூட யாரையும் உதாசினமாக பேசி விடாதீர்கள்.
எந்த விஷயத்திலும் அவசரப்படுவதையும் மற்றும் அலட்சியம் செய்வதையும் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
அரசு மற்றும் அரசியல் சார்ந்தவர்களுக்கு நன்மை ஏற்படும். அதே சமயத்தில் உங்களது வார்த்தைகளிலும் மற்றும் செயல்களிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும்.
வாகனத்தில் செல்லும்போது வேகமாக செல்லாதீர்கள். வழிப்பாதையில் உங்களுக்கு பிறர் தரும் உணவை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
சிம்ம ராசியினருக்கு நரம்புக் கோளாறு, பல் உபாதைகள், ரத்த அழுத்தம், முதுகு தண்டுவடம் பிரச்சனை, மூட்டுகள் தேய்மானம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை.
பலன் தரும் பரிகாரங்கள்
- உங்களது வாழ்க்கை செழிக்க ஒருமுறை பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து விட்டு வாருங்கள். உங்களுக்கு குருவின் அருளும் துர்கையின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
கன்னி ராசி அன்பர்களே,
கன்னி ராசியினருக்கு நான்காம் மற்றும் ஏழாம் இடத்திற்கு உரியவரான குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்திற்கு செல்கிறார்.
குரு பகவானின் விசேஷப் பார்வைகளால் உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான விரைய ஸ்தானம் மற்றும் இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானம் மற்றும் நான்காம் இடமான தாய் ஸ்தானங்களில் நன்மை ஏற்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் பழைய கோபங்களை புதுப்பித்து உங்களது மகிழ்ச்சிக்கு நீங்களே தடையாக இருக்காதீர்கள்.
இதுவரை சுப காரியங்களில் இருந்து வந்த தடை விலகும்.
பணி செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதே நேரத்தில் தேவையில்லாமல் யாரிடமும் வீண் வார்த்தைகளை பேசாமல் இருப்பது நல்லது.
இந்த காலகட்டத்தில் பிறர் குறைகளை பெரிதுபடுத்தி பேசுவதை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு நன்மை பயக்கும்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் சோம்பலை தவிர்க்க வேண்டும். தேவையில்லாத கடன்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
உறவுகளிடத்தில் பேச்சில் நிதானம் தேவை. உங்களது பிள்ளைகளிடத்தில் கனிவான வார்த்தைகளை உபயோகிப்பது நன்மை பயக்கும்.
செலவை குறைத்து வரவை சேமிப்பது உங்களது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். உங்களது முயற்சிகளை முறையாக செயல்படுத்தினால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு நன்மைகள் ஏற்படும். ரகசியங்கள் எதையும் பரம ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. சிறிய வாய்ப்பாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நன்மை பயக்கும். நட்பு வட்டாரங்களில் வேண்டாத சகவாசம் உள்ள நண்பர்களை ஒதுக்கி விடுங்கள்.
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்க கூடும். அதனால் உங்களது சலிப்புத் தன்மையையும் புலம்பலையும் தவிர்த்து விட்டு உங்களது பொறுப்புகளில் கவனத்தை செலுத்தினால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
அரசு மற்றும் அரசியல் சார்ந்தவர்களுக்கு நன்மை ஏற்படும். உங்களது செயல்களில் நிதானத்தையும் நேர்மையையும் கடைப்பிடிப்பது நல்லது.
மேலதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எந்தத் திட்டத்தையும் நீங்களாகச் சென்று செயல்படுத்த வேண்டாம்.
இந்த காலகட்டத்தில் யாருக்கும் வாக்குறுதி தருவதையோ, எதையும் படித்துப் பார்க்காமல் கையெழுத்து இடுவதையோ நீங்கள் செய்யக்கூடாது. அப்படி செய்ய நேரிட்டால் உங்களுக்கு நீங்களே பிரச்சனைகளை தேடிக்கொள்வீர்கள்.
வண்டி வாகனத்தில் பயணங்கள் மேற்கொள்ளும் போது கவன சிதறல்கள் அறவே கூடாது. வழிப்பாதையில் இருட்டான இடங்களில் இறங்குவதை தவிர்த்து விடுவது நல்லது.
இந்த காலகட்டத்தில் பொருள் இழப்பீடு, புகழ் இழப்பீடு ஏற்பட வாய்ப்பு உண்டு. எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தால் இதை தவிர்த்து விடலாம்.
விஷ பூச்சிக்கடி, ரத்த தொற்று நோய்கள், சுவாச குறைபாடு, கழிவு உறுப்பு பாதைகளில் பிரச்சனை போன்றவை ஏற்படலாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
பலன் தரும் பரிகாரங்கள்
- கன்னி ராசியினர் அருகில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்கு சென்று நரசிம்மரை வழிபட்டு வருவது நன்மை பயக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை பயக்கும்.
துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
துலாம் ராசி அன்பர்களே,
துலாம் ராசியினருக்கு ராசிக்கு மூன்றாம் இடத்திற்கும் மற்றும் ஆறாம் இடத்திற்கும் உரியவர் குரு பகவான். தற்போது துலாம் ராசியினருக்கு ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு குரு பகவான் செல்கிறார்.
குரு பகவானின் விசேஷ பார்வைகளால் உங்களது ராசிக்கு முறையே பதினோராம் இடம் லாப ஸ்தானம் மற்றும் மூன்றாம் இடம் தைரிய ஸ்தானம் மற்றும் ஒன்றாம் இடம் ஜென்ம ராசியில் நன்மைகள் ஏற்படும்.
இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும்.
இதுவரை பல இன்னல்களில் சிக்கி தவித்த உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மையை தரும். சுப காரியங்கள் கைகூடும்.
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
தடைப்பட்ட திருமணங்கள் தடையின்றி நடைபெறும்.
கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிரிந்த தம்பதிகள் இந்த காலகட்டத்தில் ஒன்று சேர்வார்கள்.
துலாம் ராசியினருக்கு புதிய தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்க பெறும்.
இந்த காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
மனைவி வழியில் மேன்மை மற்றும் குடும்பத்தில் சுபிட்சம், தொழில் லாபம் ஏற்படும்.
துலாம் ராசியினருக்கு கடன் சுமைகள் குறையும். கொடுத்த பணம் வசூல் ஆகும். பணம் சேமிப்பதில் ஆர்வம் ஏற்படும்.
எதிர்பாராத பண வரவுகளால் வீடு, மனை, வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.
துலாம் ராசியினருக்கு விற்காத சொத்துக்கள் எளிதில் விற்பனையாகும்.
துலாம் ராசியினருக்கு இதுவரை உடலில் இருந்து வந்த நோய்கள் விலகி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்க பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும்.
பலன் தரும் பரிகாரங்கள்
- குலதெய்வ வழிபாடு செய்வது நன்மை பயக்கும். வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.
விருச்சகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
விருச்சக ராசி அன்பர்களே,
விருச்சக ராசியினருக்கு இரண்டாம் இடத்திற்கும் மற்றும் ஐந்தாம் இடத்திற்கும் அதிபதியாக வருபவர் குரு பகவான். தற்போது குரு பகவான் ஆறாவது இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
குரு பகவானின் விசேஷப் பார்வைகளால் உங்கள் ராசிக்கு முறையே பத்தாம் இடத்திலும் மற்றும் இரண்டாம் இடத்திலும் மற்றும் 12ஆம் இடத்திலும் நன்மைகள் ஏற்படும்.
விருச்சக ராசியினர் இயல்பாகவே குறும்புத்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பிடிவாத குணம் மிக அதிகமாக இருக்கும். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பார்கள்.
விருச்சக ராசியினர் எதையும் விடாப்பிடியாக நின்று சாதிக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு சேமிப்பில் அதிகப்படியான அக்கறை இருக்கும்.
புதிய தொழில் மூலமாக நல்ல வருமானம் கிடைக்க பெறும். வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சக ராசியினர் வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தால் இந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்லலாம்.
விருச்சக ராசியினர் இந்த காலகட்டத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் எண்ணம் இருந்தால் மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயரில் வாங்குவது சிறப்பு. சுப விரயங்களால் மன மகிழ்ச்சி ஏற்படும்.
விருச்சக ராசியினர் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
விருச்சக ராசியினருக்கு வீடு கட்டும் நிலை அல்லது கட்டிய வீட்டை புதுப்பிக்கும் நிலை ஏற்படும். ஆபரண சேர்க்கை உண்டாகும்.
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தேவையற்ற விரோதங்கள், மனக்கசப்புகள், எதிர்ப்புகள் உருவாகும்.
உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மறையும்.
இந்த காலகட்டத்தில் பணக்கஷ்டம், இடம் விட்டு இடம் செல்லும் அமைப்பு, கடனால் தொல்லை, எதிர்பார்த்த பண வரவுகளில் தடை, வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டிய நிலை போன்றவை உருவாகும். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு பணம் செலவிடுவதை தவிர்த்தால் பணம் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து வெளியே வரலாம்.
பலன் தரும் பரிகாரங்கள்
- விருச்சக ராசியினர் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது.
- ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நன்மை பயக்கும்.
தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
தனுசு ராசி அன்பர்களே,
தனுசு ராசியினருக்கு உங்கள் ராசிக்கும் மற்றும் நான்காம் இடத்திற்கும் அதிபதியாக வருபவர் குரு பகவான். தற்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்திற்கு குரு பகவான் செல்கிறார்.
குரு பகவானின் விசேஷ பார்வைகளால் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானம் மற்றும் பதினோராம் இடமான லாப ஸ்தானம் மற்றும் ஜென்ம ராசிக்கும் நன்மைகள் ஏற்படும்.
கடந்த ஒரு வருட காலத்தில் உங்களுக்கு குரு பகவான் பல மன உளைச்சல்களையும், சங்கடங்களையும், பண விரயம், தொழில் நஷ்டம், கையிருப்பு கரைந்து கடனாளி ஆகுதல் போன்ற நிலைகளில் சிக்கி தவித்து இருப்பீர்கள். இந்த காலகட்டம் உங்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக அமையும்.
இந்த காலகட்டத்தில் தனுசு ராசியினர் ராஜயோகத்தை அடையலாம்.
தனுசு ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் தடைப்பட்ட திருமணங்கள் சிறப்பாக நடைபெறும். புத்திர பாக்கியம் ஏற்படும்.
தனுசு ராசியினருக்கு பூர்வீக வழியில் சொத்துக்கள் சேர்க்கை மற்றும் எதிர்பாராத பண வரவுகள் மற்றும் வாங்கிய கடன் அடைபடுதல், ஆலய தரிசனங்கள், வீடு, மனை, வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படுதல் போன்றவை நிகழும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் காணப்படும். படித்து முடித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
தனுசு ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் பணம் சேமிப்பதில் ஆர்வம் காணப்படும். மூத்த சகோதர சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும்.
கொடுத்த பணம் வசூல் ஆகும். இதுவரை நோயிலிருந்து அவதிப்பட்டிருந்த தனுசு ராசியினருக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
தனுசு ராசியினருக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமையும். குலதெய்வத்தின் அருள் இந்த சமயத்தில் கிடைக்க பெறும்.
தனுசு ராசியினருக்கு தந்தை மகன் உறவு பலப்படும். விற்காத பழைய சொத்துக்கள் விற்பனையாகும்.
இந்த காலகட்டத்தில் பங்காளி சண்டைகள் முடிவுக்கு வரும். சுப செலவுகள் ஏற்படும்.
தீர்த்த யாத்திரைகள், வெளிநாடு செல்லுதல் போன்றவை நிகழும்.
விவகாரத்து ஆனவர்களுக்கு மறுமணம் செய்யும் அமைப்பு தேடிவரும்.
பலன் தரும் பரிகாரங்கள்
- தனுசு ராசியினர் வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் குரு ஓரை வரும் நேரத்தில் கோயிலுக்குச் சென்று பசு மாடுகளுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை, வெல்லம் ஆகியவற்றை உணவாக கொடுப்பது நன்மை பயக்கும்.
- குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.
- சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுவது நன்மை பயக்கும்.
மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
மகர ராசி அன்பர்களே,
மகர ராசியினருக்கு மூன்றாம் இடத்திற்கும் மற்றும் 12-ஆம் இடத்திற்கும் அதிபதியாக வருபவர் குரு பகவான். தற்போது உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு குருபகவான் செல்கிறார்.
குரு பகவானின் விசேஷப் பார்வைகளால் உங்களது ராசிக்கு முறையே எட்டாவது இடமான ஆயுள் ஸ்தானத்திலும் மற்றும் 10-ஆம் இடமான தொழில் ஸ்தானத்திலும் மற்றும் 12-ஆம் இடமான விரைய ஸ்தானத்திலும் நன்மைகள் ஏற்படும்.
சுப விரயமாக மனைவியின் பெயரில் அல்லது பிள்ளைகளின் பெயரில் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் அமைப்பு ஏற்படும்.
மகர ராசியினருக்கு வீண் விரயங்கள் தவிர்க்கப்படும். மருத்துவ செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் விருத்தி ஏற்படும்.
மகர ராசியினருக்கு பட்டம்,பதவிகள் தேடி வரும். உயர் பதவிகள் கிடைக்கும்.
மகர ராசியினருக்கு பொருளாதார நிலை சற்று ஏற்றம் இறக்கமாகவே காணப்படும்.
எலக்ட்ரானிக் பொருட்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். இந்த காலகட்டத்தில் அலைச்சல், சின்ன சின்ன சண்டைகள், உறவுமுறைக்குள் பிரச்சனைகள், தாயாரின் உடல் நலம் பாதிப்பு, மருத்துவ இதர செலவுகள், நட்பு மற்றும் உறவுகள் வட்டாரத்தில் அவமானப்படும் நிலை உருவாகுதல் போன்றவை ஏற்படும்.
தொழிலில் பணவரவில் தடை, கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் ஏற்படும்.
பலன் தரும் பரிகாரங்கள்
- மகர ராசியினர் அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.
- ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை வணங்கி விட்டு வாருங்கள். உங்களது வாழ்க்கையில் நிம்மதி மற்றும் வெற்றிகள் வந்தடையும்.
கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
கும்ப ராசி அன்பர்களே,
கும்ப ராசியினருக்கு இரண்டாம் இடத்திற்கும் மற்றும் பதினோராம் இடத்திற்கும் அதிபதியாக வருபவர் குரு பகவான். தற்போது உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு குரு பகவான் செல்கிறார்.
கும்ப ராசியினருக்கு உங்கள் ராசிக்கு முறையே களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்திற்கும், பாக்கியஸ்தனமான ஒன்பதாம் இடத்திற்கும், பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கும் நன்மைகள் ஏற்படும்.
கும்ப ராசியினர் சுகத்தையும் சோகத்தையும் சமமாக எடுத்துக் கொள்பவர்கள். இவர்களுக்கு முன் கோபம் அதிகம். அதுவும் நியாயமான கோபமாக தான் இருக்கும்.
கணவன் மனைவி உறவு மேம்படும். உறவினர்கள் மூலமாக ஆதாயம் கிட்டும்.
திருமணம் சம்பந்தப்பட்ட சுப காரியங்கள் நிகழும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
தந்தை மகன் உறவு மேம்படும். தந்தையால் ஆதாயம் கிட்டும். வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும்.
நோய்களிலிருந்து விடுதலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கும்ப ராசியினருக்கு இளைய சகோதர சகோதரிகளிடத்தில் மனக்கசப்புகள் ஏற்படும். பணம் சார்ந்த விஷயங்களில் நஷ்டங்கள் ஏற்படும். சிலருக்கு ஆன்லைன் மூலமாக ஏமாற்றங்கள் ஏற்படும்.
உங்களது முயற்சிகளில் தடை, வீட்டை மாற்ற வேண்டிய சூழ்நிலை, ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை, உத்தியோகத்தில் இடம் மாறுதல்கள், சகோதர சகோதரிகளிடத்தில் வீண் வாக்குவாதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்படும்.
கும்ப ராசியினர் இந்த காலகட்டத்தில் கடன் வாங்காமல் இருப்பது நன்மை பயக்கும். நம்பிக்கை துரோகம், கூட இருந்தே குழி பறிப்பவர்கள், யாரை நம்புவது போன்ற நிறைய குழப்பங்கள் ஏற்படும்.
பலன் தரும் பரிகாரங்கள்
- கும்ப ராசியினர் சிவன் பார்வதியை வழிபடுவது நன்மை பயக்கும்.
- ஒரு முறையாவது திருவண்ணாமலை சென்று சிவன் பார்வதியை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். உங்களது வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி வந்தடையும்.
மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
மீன ராசி அன்பர்களே,
மீன ராசியினருக்கு உங்களது ராசிக்கும் மற்றும் பத்தாம் இடத்திற்கும் அதிபதியாக வருபவர் குரு பகவான். தற்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்திற்கு குரு பகவான் செல்கிறார்.
குரு பகவானின் விசேஷ பார்வைகளால் உங்களது ராசிக்கு முறையே ஆறாம் இடமான கடன், நோய் மற்றும் எட்டாமிடமான ஆயுள் ஸ்தானம் மற்றும் பத்தாமிடமான தொழில் ஸ்தானம் ஆகியவைகளில் நன்மைகள் ஏற்படும்.
கடந்த ஒரு வருட காலத்தில் பல வகைகளில் அல்லல் பட்டு வந்த உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும்.
இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ராஜயோகத்தை வழங்கும்.
எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிறப்பான பொருளாதார சூழ்நிலை அமையும்.
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
வீடு, மனை, நகை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
இதுநாள் வரை நிலுவையில் இருந்து வந்த கோர்ட்டு கேஸ் வழக்குகள், தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
பெரிய சிக்கலில் இருந்து இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு விடுதலை பெற்று தரும். தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபித்து காட்டும் சூழ்நிலை ஏற்படும்.
கணவன் மனைவி உறவு மேம்படும்.
வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மை ஏற்படும்.
மீன ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் திருமணம், புத்திர பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும்.
மீன ராசியினருக்கு உற்றார் உறவினர்களின் அனுகூலம் கிட்டும்.
பலன் தரும் பரிகாரங்கள்
- மீன ராசியினர் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று புதன்கிழமை புதன் ஓரையில் வழிபடுவது நன்மை பயக்கும்.
- ஒருமுறையாவது ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசித்து விட்டு வாருங்கள். உங்களது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்.
இதையும் படிக்கலாமே,
மகா சிவராத்திரி (Maha shivaratri in Tamil 2023) சிறப்புகள் மற்றும் சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ? |