ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில் திருநறையூர் | திருநறையூர் மாந்தி கோவில் கும்பகோணம் | Mandhi Temple | Sri Ramanathaswamy Kovil Thirunaraiyur
அனைவருக்கும் வணக்கம், நாம் இந்த பதிவில் காண இருப்பது என்னவென்றால் சனி பகவான் தனது குடும்பத்தோடு கோவில் கொண்டிருக்கும் “ திருநரையூர் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோயில்” பற்றிய சிறப்பு விவரங்கள்.
மாந்தி கோவில் கும்பகோணம்
திருநறையூர் மாந்தி கோவில் கும்பகோணம் | Sri Ramanathaswamy Kovil Thirunaraiyur
கோவில்களின் தலைநகரம் என அழைக்கப்படும் கும்பகோணத்தில், சுமார் 1000 கோவில்கள் உள்ளன. அது மட்டுமின்றி மற்றொரு சிறப்பு என்னவென்றால், கும்பகோணத்தில் அனைத்து நவகிரகக் கோவில்களும் 90 கிமீ சுற்றுவட்டத்தில் அமைந்துள்ளது. அதில் கும்பகோணத்தில், நாச்சியார் கோவில் அருகில் திருநறையூர் என்னும் திருத்தலத்தில் சனிபகவான் தனிச்சந்நிதியில் அருள் தரும் இடம் மாந்தி கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ ராமநாத சுவாமி கோவில்.
ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில் வரலாறு
இராமாயணத்தில் மன்னர் தசரதன் தன் நோய் தீர, திருத்தலமான ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் உள்ள சனிபகவானை வழிப்பட்டிருக்கிறார். ராமர் இராவணனை வதம் செய்து மீண்டும் அயோத்தி திரும்பும்போது தன் தந்தை வழிபட்ட ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்து புண்ணிய நீராடி, மணலினால் லிங்கம் செய்து வழிபட்டதாகவும், உடன் இருந்த அனுமனும் இந்த ஆலயத்தின் சிறப்புணர்ந்து சிவ வழிபாடு செய்ததாகவும் வரலாறு குறிப்பிடுகிறது. அதற்கு சான்றாக இந்த ஆலயத்தில் அனுமந்த லிங்கம் பிரகாரத்தில் அமைந்துள்ளது. மாந்தி கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில் ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் கட்டப்பட்டது, காலம் கடந்து இன்றும் போற்றப்பட்டு வருகிறது.
திருநறையூர் மாந்தி கோவில் சிறப்பு
சிவபெருமான் ராமநாத சுவாமியாகவும், பர்வதவர்த்தினியார் அம்பாளாகவும் அருள் பாலிக்கும் இந்த திருநறையூர் ஆலயத்தில் முக்கிய சிறப்பாக விளங்குபவர் சனீஸ்வரன். இந்தக் கோவிலில் வேறெங்கும் காணமுடியாத அற்புதம் போல சனீஸ்வரர் தனது இரண்டு மனைவிகள் மந்தா தேவி, ஜேஷ்டா தேவி மற்றும் தனது இரண்டு மகன்கள் குளிகன், மாந்தி ஆகியோருடன் சேர்ந்து குடும்ப சமேதராய்( குடும்பஸ்தராக) காட்சியளிக்கிறார். நவகிரக மேடையின் நடுவில் இருக்கும் சூரியனும் தன் மனைவிகள் உஷாதேவியுடனும், பிரத்யுஷா தேவியுடனும் காட்சியளிப்பது சிறப்பு. மூலவரான சிவபெருமானுக்கு கொடிமரம் இல்லை, ஆனால் சனி பகவானுக்கு கொடிமரம், பலிபீடம் மற்றும் சந்நிதி முன் காக வாகனம் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.
அருள்மிகு சனீஸ்வரர் குறிப்பு விவரங்கள்
சனி பகவான், சனேசன், மந்தன், சனிச் சந்திரன், சனைச்சரன், மந்தன், குருத்தந்தன், நீல மேகச்சடையான், நீலகண்டன், அழகு நீலன், கதிர்மகன், காரி, கரியவன், சௌரி, மேற்கோள், பங்கு, நீலன், முகன், முடவன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சனீஸ்வரர் நவகிரகங்களில் புகழ் மற்றும் சக்தி பெற்ற ஒருவர். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த குமாரனே சனி பகவான், நீலம், கருப்பு இவருக்கு உகந்த நிறம். சனீஸ்வரனின் வாகனம் காகம்.
நவகிரகங்களில் சனிபகவான் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவார். இவரே ஒருவரின் வாழ்வில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவார். சனி பகவான் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை தீர்மானிக்கும் கிரகமாக இருப்பதால் “ஆயுள்காரர் “ என அழைக்கப்படுகிறார். சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, அவரைப் போல கெடுப்பாரும் இல்லை. என்னதான் சனி பகவான் அளவற்ற சோதனையை கொடுத்தாலும், அதுபோலவே அளவற்ற இன்பங்களையும் கொடுக்கும் ஒரு நீதிமான் ஆவார். சனி பகவானுக்கு கருங்குவளை மாலை அணிவித்து தீபம் ஏற்றி வந்தால் வறுமைகள், துன்பங்கள் நீங்கி தொழில் பெருகும். சனி தோஷம் நீங்க மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க சனீஸ்வரரை பிரார்த்தனை செய்ய வேண்டும், ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவரைத் வழிபட்டால் நன்மை உண்டாகும், மாற்றம் பிறக்கும்.
” கொடுக்கும் சனியே கெடுப்பார்! “
குளிகன் பற்றிய விவரங்கள்
சனி பகவானுக்கும் ஜேஸ்ட்டா தேவிக்கும்( நீலா தேவிக்கும்) பிறந்தவர் குளிகன். இருப்பினும் குளிகனுக்கு ராசி கட்டத்தில் இடம் கிடையாது. ஆனால் குளிகன் அவர்களுக்கு சில பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது. குளிகன் ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு செயல்படுவார், அதனை “குளிகை காலம்” என அழைப்பர். குளிகன் நல்ல பலன்களை தருபவர், சில காரியங்களைத் தவிர மற்ற பல செயல்களை இந்த நேரத்தில் தொடங்கலாம்.
குளிகை நேரத்தில் செய்யக்கூடியவை: பொன், வெள்ளி வாங்குவது, ஆடை வாங்குவது, புதுமனை வாங்குவது, கடன் அடைப்பது, தொழில் தொடங்குவது போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்வதால், அது மீண்டும் மீண்டும் நடைபெறும்.
குளிகை நேரத்தில் செய்யக்கூடாதவை: இந்தக் குளிகை நேரத்தில் வரன் தேட தொடங்க கூடாது, திருமணம் செய்யக்கூடாது. குளிகையில் கடன் வாங்க கூடாது. இந்த நேரத்தில் சவத்தை எடுக்கக் கூடாது. திருமணம், இழப்பு, பிரிவு, கடன் மீண்டும் மீண்டும் வராமல் தவிர்க்க இவற்றை குளிகை நேரத்தில் தொடங்கக்கூடாது.
படிப்பவர்களின் புரிதலுக்காக வாரத்தின் ஏழு நாட்களில் வரும் குளிகை நேரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கிழமை | நேரம் |
திங்கள் | 1.30 PM TO 3.00 PM |
செவ்வாய் | 12.00 PM TO 1.30 PM |
புதன் | 10.30 AM TO 12.00 PM |
வியாழன் | 9.00 AM TO 10.30 AM |
வெள்ளி | 7.30 AM TO 9.00 AM |
சனி | 6.00 AM TO 7.30 AM |
ஞாயிறு | 3.00 PM TO 4.30 PM |
மாந்தி பற்றிய விவரங்கள்
சனீஸ்வரனின் வெட்டப்பட்ட காலில் இருந்து உருவானவர் மாந்தி. வெட்டப்பட்ட கால் என்பது சவத்திற்கு சமம் எனலாம். ராசி கட்டத்தில் மாந்திக்கு இடம் உண்டு. ஒருவர் எவ்வளவுதான் கெட்டவராகவே இருந்தாலும், அவர் இறந்த பிறகு அவரை தூற்றுவது, “பிரேத சாபம்” என்னும் கடுமையான தோஷத்தைத் உண்டாக்கும். இதுவும் மாந்தி தோஷத்தில் ஒரு பகுதி தான். எனவே எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்தோ, அவர்களை ஏளனமாகவோ பேசாதீர்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும் எனப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த மாந்தி தோஷம் நீங்க வேண்டுமா?
இறந்தவரின் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்வதும், சவ ஊர்வலங்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், சவ அடக்கத்துக்கு உதவிகளைச் செய்வதும், மாந்தி தோஷத்தை வெகுவாகக் குறைக்கும், அவ்வளவு ஏன் மாந்தி தோஷம் இல்லாமல் போகும்.
ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில் விசேஷங்கள்
✓ திருநறையூரில் உள்ள மாந்தி கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் சனி பகவான் குடும்பத்தோடு ஒரே சந்நிதியில் அருள்பாலிப்பது வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சி.
✓ சிறந்த பரிகார ஸ்தலமான ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்து வழிபட்டால் ஜாதகத்தில் இருக்கும் எப்பேர்ப்பட்ட சனிதோஷங்களும் போகும் மற்றும், நீண்ட நாட்கள் நோய்கள் தீரும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கும்.
✓ மாந்தி கோவிலில் சனீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்த பின், அவர் உடம்பிலிருந்து வழியும் பால் நீல நிறத்தை அடைகிறது.
✓ சனிப்பெயர்ச்சி அன்று சனீஸ்வர பகவானுக்கு வேறு எந்த ஒரு தலத்திலும் நடைபெறாத திருக்கல்யாணம் உற்சவம் இந்த மாந்தி கோவிலில் நடைபெற்று, திருவீதி உலா வருவது சிறப்பாகும்.
✓ பௌர்ணமி, மகா சிவராத்திரி, பிரதோஷம், சனிப்பெயர்ச்சி, மார்கழி திருவாதிரை போன்ற விசேஷ காலங்களில் மாந்தி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று வையகம் முழுவதும் நன்மை உண்டாகும்.
✓ அருள்மிகு ராமநாதசுவாமி கோவில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானை உடன் முருகன், கஜலட்சுமி, அண்ணாமலையார் (சிவபெருமான்), பிரம்மா, துர்காதேவி, சண்டிகேஸ்வரர், ஹனுமந்த லிங்கம் மற்றும் நவக்கிரக சந்நிதியும் உள்ளது சிறப்பு.
✓ இந்த மாந்தி கோவிலில் ரிஷப வாகனத்தில் அமர்ந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் (சிவபெருமான்) மெய்சிலிர்க்கும் தெய்வீக காட்சி சிறப்பாகும்.
சனி மற்றும் மாந்தி தோஷங்கள் நீங்க பரிகாரங்கள்
• சனிதசை, கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி உள்ளவர்கள் திருநறையூர் ராமநாத சுவாமி கோவிலில், தொடர்ந்து எட்டு வாரங்கள் அர்ச்சனை செய்துவந்தால் சிரமங்கள் குறையும் அதுமட்டுமின்றி வாழ்வில் முன்னேற்றம் அடைவது உறுதி.
• மாந்திக் கோயிலில் குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வணங்கி, நீல வண்ண வஸ்திரம் தந்து, பூமாலை அணிவித்து, நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால், அனைத்து வித ஜன்மச் சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி தசை ஆகிய சனி தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
• ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில் சென்று அங்கிருக்கும் சிவலிங்கத்தை முறையாக வழிபட்டால் மாந்தி தோஷம் நீங்கும்.
• மாந்தி வெட்டப்பட்ட காலில் இருந்து உருவானதால், கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தங்களால் முடிந்தவரை உதவியை செய்யுங்கள். இதை செய்வதன் மூலம் மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கலாம் மற்றும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் விரைவாக புத்திர பாக்கியம் பெறுவார்கள்.
• முழுமனதோடு சிவபெருமானை தொடர்ச்சியாக வழிபாடு செய்து, தினமும் வேத மந்திரங்களை கேட்டு வருவதும் மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கும்.
நல்வாழ்வு பெற வழிபாடுகள்
• சனிக்கிழமை விரதம் இருந்து தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்.
• தினமும் காலை உணவு உண்ணும் முன் காகத்திற்கு உனைவு வைக்க வேண்டும்.
• “பிரேத சாபம்” என்னும் தோஷம் நீங்க சவ ஊர்வலம் வரும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்தி, சவ அடக்கத்திற்கு தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
• கால் ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள், உதவி செய்ய முடியாத நிலையில் அவர்களை ஏளனமாக பார்த்து பேசாதீர்கள்.
கும்பகோணத்தில், நாச்சியார் கோவில் அருகில் திருநறையூரில் உள்ள இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில் பற்றிய விவரங்களை பார்த்தோம்.
முழுமனதோடும் நம்பிக்கையோடும் நீங்களும் உங்கள் குடும்பத்துடன் மாந்திக் கோவிலுக்கு சென்று பரிகார வழிபாடுகள் செய்து சனி தோஷம், மாந்தி தோஷம் நீக்கி குடும்ப அமைதி, குடும்ப ஒற்றுமை, நிம்மதியன நிலை, வருமானம் உயர்வு பெறுங்கள்! நன்றி!
இதையும் படிக்கலாமே,
நீப்பத்துறை சென்னம்மாள் கோவில் வரலாறு | Neepathurai Chennamma Kovil History in Tamil |