எண்கண் முருகன் கோயில் தல வரலாறு | Engan Murugan Temple History in Tamil
அனைவருக்கும் வணக்கம். நாம் இந்த பதிவில் காண இருப்பது என்னவென்றால், திருவாரூரில் உள்ள அருள்மிகு எண்கண் முருகன் கோவில் வரலாறு மற்றும் இக்கோவில் பற்றிய விரிவான விவரங்கள்.
திருவாரூர் எண்கண் முருகன் கோவில்
திருவாரூர் மாவட்டத்தில் எண்கண் என்னும் திருத்தலத்தில் மிகவும் ஆற்றல் மிக்க எண்கண் முருகன் கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சோழர்களின் பழமையான தலைநகரங்களில் ஒன்றாக இருந்தது திருவாரூர், மற்றும் இக்கோவில் சோழக் குலத்தை சேர்ந்த முத்தரசன் என்ற இரண்டாம் குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது. இந்த கோவிலின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர், இறைவி பெரியநாயகி ஆவார். இது ஒரு சிவன் கோயிலாக இருந்தாலும், சுப்ரமணிய சுவாமி (முருகப்பெருமான்) தான் முக்கிய தெய்வமாக அருள்பாலிக்கிறார்.
எண்கண் முருகன் தல வரலாறு
படைக்கும் தொழில் செய்பவர் நான்முகன் (நான்கு முகம் கொண்ட பிரம்மன்) என்பது நாம் அனைவரும் அறிந்ததே! முருகப் பெருமான் பிரம்மாவிடம் “பிரணவ மந்திரத்தின்” அர்த்தம் என்னவென்று கேட்டார். பிரம்ம தேவனுக்கு உரிய பதில் நினைவில் இல்லை. இதனால் சினம் கொண்ட முருகன் பிரம்மாவை சிறையில் இட்டார். அது மட்டுமா! பிரம்மாவின் படைக்கும் தொழிலையும் முருகனே செய்தார். பின்னர் பிரம்மாவை சிறை விடுவித்தும், படைப்புத் தொழிலை அவருக்கு தராமல் முருகப்பெருமானே செய்தார்.
தன் அறியாமையால் உருவான சிக்கலுக்கு தீர்வு காண பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை தனது எட்டுக் கண்களால் மனதார பிரார்த்தனை செய்தார். தீவிர வேண்டுதலை உணர்ந்த சிவபெருமான் பிரம்மாவின் முன் தோன்றினார். நடந்த அனைத்தையும் கூறி, தன் தவறை ஏற்றுக்கொண்டு தனது படைக்கும் தொழிலை மீண்டும் அவருக்கேப் பெற்றுத் தருமாறு பிரம்மா சிவபெருமானிடம் கேட்டார். சிவபெருமான் கதிர்வேலனை (முருகனை) அழைத்து படைப்புத் தொழிலை மீண்டும் பிரம்மாவிடம் தருமாறு கூறினார். அதற்கு முருகப்பெருமான் சினத்துடன், பிரணவ மந்திரத்தின் பொருள் அறியாத பிரம்மன் படைக்கும் தொழிலை செய்வது ஒழுக்கமற்ற செயல் என்பேன்! என்னால் வழங்க இயலாது என்றார். இப்படி பிடிவாதம் கொண்ட முருகனை, சிவபெருமான் அமைதிப்படுத்தினார். பிரணவ மந்திரத்தின் பொருள் மற்றும் பெருமையை தனக்கு உபதேசம் செய்தது போலவே பிரம்மாவிற்கும் உபதேசம் செய்து பின்பு படைப்புத் தொழிலை மீண்டும் அவருக்கே தருமாறு சிவப்பெருமான் கேட்டுக்கொண்டார். முருகனும் சிவப்பெருமானுக்கு கீழ்ப்படிந்து இத்தலத்திலேயே பிரம்மாவிற்கு பிரணவ மந்திரத்தின் தத்துவத்தை விளக்கினார், பின்பு தென் திசையை நோக்கி அமர்ந்து சிருஷ்டித் (படைப்பு) தொழிலை மீண்டும் பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.
இந்த இடத்திற்கு எண்கண் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
பிரம்மா தனது எட்டுக் கண்களால் (எண்கண்) சிவப்பெருமானை பூஜித்ததால், இத்தலம் எண்கண் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இத்தலம் பிரம்மபுரம் எனவும் அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
எண்கண் முருகன் சிலை வரலாறு
திருவாரூர் எண்கண் முருகன் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சிலையை போலவே சிக்கல் என அழைக்கப்படும் பொரவாச்சேரி மற்றும் எட்டுக்குடி என்னும் இரண்டு தலங்களில் ஒரே சிற்பியால் செதுக்கப்பட்ட முருகன் சிலை உள்ளது. சிற்பியின் வேலை செதுக்குவது, இதில் என்ன பெரிய சிறப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ஒரே மாதிரியான அந்தச் சிற்பங்களை உருவாக்கும்போது அந்தச் சிற்பி எதிர்கொண்ட பல்வேறு சோதனைகளை பற்றி இப்போது காண்போம்.
சோழக் குலத்தை சேர்ந்த முத்தரச மன்னன் ஆட்சியில் இருந்த போது, முருகப்பெருமான் மீது கொண்ட பற்றில் பவித்ரன் என்ற சிறந்த சிற்பியை அழைத்து கம்பீரமான முருகன் சிலை ஒன்றை உருவாக்க சொன்னார். முருகன் பக்தராக இருந்த அந்த சிற்பியும் சிக்கல் என்னும் ஊரில் சிலையை உருவாக்கினார். அவர் தத்ரூபமாக செதுக்கிய முருகன் சிலையின் அழகை கண்ட மன்னன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். மன்னர் அந்த சிற்பிக்கு பொன் பொருள் கொடுத்து அவரின் சிற்ப ஞானத்தை கொண்டாடவில்லை! அதற்கு மாறாக இதைப் போன்ற அதிசய சிலையை வேறு எங்கும் இந்த சிற்பி உருவாக்க கூடாது என்ற குறுகிய மனப்பான்மையோடு சிற்பியின் உளி ஏந்தும் வலது கையின் கட்டைவிரலை வெட்டினார் மன்னர். விரல் போன பின்னும் மனம் தளராத சிறப்பி மீண்டும் எட்டுக்குடி என்னும் ஊரில் முருகன் சிலையை செதுக்கினார். சிக்கலில் உள்ள முருகன் சிலையை காட்டிலும், அழகில் மிஞ்சியது எட்டுக்குடியில் உருவாக்கப்பட்ட முருகன் சிலை. தன் கட்டளையை மீறிய சிற்பி, வேறொரு தலத்தில் நிகரற்ற சிலையை செதுக்கியதை ஒற்றன் மூலம் அறிந்து கொண்டார் மன்னர். விரலை வெட்டியும் சிலையை உருவாக்கியதால் சினமடைந்த மன்னர் சிற்பியின் கண்களை குருடாக்கினார். இதனை செய்வதன் மூலம் சிற்பியால் கண்பார்வை இல்லாமலும் ஒரு விரல் இல்லாமலும் இனி எந்த சிலையையும் செதுக்க முடியாது என்று நம்பினார். ஆனால் சிற்பியோ முருகன் மீது கொண்ட அன்பின் காரணமாக மற்றொரு சிற்பத்தை உருவாக்க நினைத்தார், நினைத்தது அதுமட்டுமா மற்றொரு அழகிய முருகன் சிலையை செதுக்கினார். அது எப்படி அந்த சிற்பியால் இரண்டு கண்கள் இல்லாமலும், உளியை பிடிக்க வலது கையில் கட்டைவிரல் இல்லாமலும் சிலையை செதுக்க முடிந்தது! என்று யோசிக்கும் உங்கள் மனக்குரல் கேட்கிறது. இதற்கான விளக்கம் மற்றும் அதிசய நிகழ்வுகளை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
“கல்லில் உயிர்த்த எழில்”
சமீவனம் என்ற இடத்தில் மூன்றாவது முருகன் சிலையை செதுக்க துணிச்சலான முயற்சி செய்த சிற்பி கண்பார்வை இல்லாமல் சிரமப்பட்டார், பின் ஒரு சிறுமியின் உதவி அவருக்கு கிடைத்தது. அந்த பெண் குழந்தையின் கண்களை தன் கண்களாக நினைத்தார், சிறுமியின் உதவியோடு முருகன் சிலையை முழுவதுமாக செதுக்கினார். முருகன் சிலையின் கண்களை செதுக்கும் போது உளி அச்சிறுமியின் கையில் பட்டு இரத்த துளிகள் சிதறியது, அதில் சில துளிகள் சிற்பியின் கண்கள் மீது பட்டது. சிற்பியின் கண்கள் உறுத்த தொடங்கியது பின் சிற்பியின் கண்பார்வை மீண்டும் கிடைத்தது. எண்ணமே கண்ணாக இருந்த சிற்பி, இது முருகனின் திருவிளையாடல் என உணர்ந்து ஆனந்தத்தில் என் கண் முருகா! என்றார், அதுவே எண்கண் முருகன் என்ற பெயர் வரக் காரணம் ஆயிற்று. முருகப்பெருமானே அந்த சிறுமியின் ரூபத்தில் வந்து சிற்பிக்கு உதவி செய்ததாக இன்றும் பலரால் நம்பப்படுகிறது.
முதலில் உருவாக்கப்பட்ட அழகிய முருகன் சிலை சிக்கல் என்னும் ஊரில் உள்ளது. இரண்டாவதாக உருவாக்கப்பட்ட முருகப்பெருமான் சிலை எட்டுக்குடி என்னும் ஊரில் உள்ளது. மூன்றாவதாக உருவாக்கிய சிலை தான் எண்கண் என்னும் ஊரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ளது.
எண்கண் முருகன் சிலை நுட்பங்கள்
முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் மயில் மேல் தனியாக அமர்ந்து காட்சி அளிக்கிறார். முருகன் முன்புறமாக மூன்று முகங்கள் மற்றும் பின்புறமாக மூன்று முகங்கள் கொண்டு, இங்கு ஆறுமுகப் தெய்வமாக உள்ளார். ஒவ்வொரு முகமும் தனித்தன்மை வாய்ந்த அருள் தரும் முகமாக இருக்கிறது. அதுமட்டுமா! பன்னிரண்டு கரணங்களில், வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி மற்றும் அங்குசம் போன்ற பல்வேறு தெய்வீக ஆயுதங்களை தாங்கியுள்ளார். முருகப்பெருமான் சிற்பத்தின் உடலில் நரம்புகள் தெரியும்! முருகன் கையில் உள்ள எல்லா விரல்களிலும் மோதிரம் போட முடியும் அவ்வளவு துல்லியமாக விரல்கள் ஒவ்வொன்றும் இடைவெளி விட்டு இருக்கும்! ஆறுமுகப் பெருமானின் காது மடல்களில் தோடு போடலாம். முருகனின் மொத்த உடல் எடையை தாங்கி நிற்பது மயிலின் ஒற்றை கால் தான் என்பது நம்பமுடியாத உண்மை! இந்த சிலையில் உடல் வெப்பம் இருப்பதாகவும் உயிரோட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எண்கண் முருகன் கோவில் சிறப்பு
சிக்கலில் சக்தி வேல் பெற்று சிங்கமுகம் பானு முகனை அழித்து, பின்பு சூரபத்மனை இரண்டு கூறாகப் பிளந்து கொடியாகவும் சேவலாகவும் கொண்டு இந்திரனுக்கு அவனது நகரான அமராவதியை கொடுத்தபின் இந்த எண்கண்ணில் வந்து அமர்ந்தார் முருகப்பெருமான். இதை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். வேறு எங்கும் காணாத அதிசயமாக எண்கண் முருகன் கோவிலில், ஆறுமுகப்பெருமான் கம்பீரமாக மயில் மீது அமர்ந்து, இரு புறம் வள்ளி மற்றும் தெய்வானையுடன் சேர்ந்து அருள்பாலிக்கிறார்.
பெரும்பாலான ஆலயங்களில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி அமைந்திருப்பார், ஆனால் இந்த ஒரே தலத்தில் தான் முருகப்பெருமான் தெற்கு திசை பார்த்து காட்சியளிக்கிறார். இது மட்டுமல்ல இந்த கோவில் மேலும் அற்புதங்கள் நிறைந்தது என்பதற்கு சான்றாக பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், இத்தலத்தில் பிரம்மபுரீஸ்வரர் லிங்கம் மீது சூரிய ஒளி படும். இந்த முருகன் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, 14 நாட்கள் பிரம்மோற்சவ மாகாணம் சிறப்பாக நடைபெறும். ஷஷ்டி, கிருதிகை, அமாவாசை, பௌர்ணமி, கந்த ஷஷ்டி, தீபாவளி, விசாகம், பங்குனி உத்திரம் போன்ற சிறப்பு தினங்களில் முருகப்பெருமானுக்கு தயிர், நெய், பால், தேன் , பஞ்சாமிர்தம், திரவியம் பொடி, சந்தனம், மஞ்சள், விபூதி, பன்னீர், இளநீர், நல்லெண்ணெய் ஆகியவற்றால் சிறப்பான அபிஷேகம் செய்யப்படுகிறது.
உலகில் எங்கும் இல்லாத அதிசயமாக நித்திய கருட சேவையில் பெருமாள் இங்கு ஆதிநாராயண பெருமாளாக கருடன் மீது அமர்ந்தபடி அற்புதமாக காட்சியளிக்கிறார். திருவாரூர் எண்கண் முருகன் கோவிலில் சிவப்பெருமான் சந்நதி, பெரியநாயகி அம்பாள் சந்நதி, பிரம்ம, நடராஜர் சிவகாமி, பஞ்ச லிங்கங்கள், பைரவர், ஶ்ரீ சப்த கன்னிகள், ஶ்ரீ ப்ரதான வினாயகர், ஶ்ரீ பாலசுப்பரமண்யர், ஶ்ரீ அர்தநாதிஷ்வரர், ஶ்ரீ தெட்சணாமூர்த்தி, ஶ்ரீ புரணை புஷ்பகலை ஆகியோரின் சந்நதி உள்ளது.
முருகன் அருள் பெற்ற சிற்பி, பவித்ரன். அவர் தான் சில்ப முனி என்று அழைக்கப்பட்டு வருகிறார். இத்தலத்தில் வன்னி மரத்தடியில் தான் சில்ப முனியின் ஜீவசமாதி உள்ளது.
எண்கண் முருகன் கோவில் பரிகார தலம்
இத்தலத்தில் கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள், முழுமனதோடு முருகனை முறையாக வழிபட்டால் அந்தக் குறை விரைவில் சரி செய்யப்படும் என்பது நம்பிக்கை. கண்பார்வை குறை உள்ளவர்கள், ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திரத்தில் தொடர்ந்து பனிரெண்டு மாதங்கள் மனதில் நம்பிக்கையுடன் முருகப்பெருமானுக்கு சண்முகார்சனை (சண்முக அர்ச்சனை) செய்து வந்தால் கண்பார்வை குணமடையும் என்பது மற்றோரு சிறப்பு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை தேடுபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் நிச்சயம் நிறைவேறும். செவ்வாய் கிழமை விரதம் இருந்து இறைவனை தரிசித்தால் நன்மை உண்டாகும். குருதோஷம் நீங்க நல்ல ஞானத்தையும் கல்வியையும் முறைப்படி பெற வியாழக்கிழமை நெய் விளக்கு ஏற்றி விரதமிருந்து வழிபடலாம்.
“ஓம் சரவண பவா!” நீங்கள் உங்கள் குடும்பத்துடன் எண்கண் முருகன் கோவில் சென்று முழுமனதோடு பிரார்த்தனை செய்து சகல ஐஸ்வர்யங்களும் பெற்று மகிழுங்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்ததை அனைவருக்கும் பகிருங்கள். நன்றி!
இதையும் படிக்கலாமே,
நீப்பத்துறை சென்னம்மாள் கோவில் வரலாறு | Neepathurai Chennamma Kovil History in Tamil |