Homeவார கட்டுரைகள்மாநிலத்தின் ஆளுநரும் அவரது அதிகாரங்களும் | Governor in Tamil

மாநிலத்தின் ஆளுநரும் அவரது அதிகாரங்களும் | Governor in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

மாநிலத்தின் ஆளுநரும் அவரது அதிகாரங்களும் | Governor in Tamil

வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் மாநிலத்தின் ஆளுநரும் அவரது நியமனம் மற்றும் அதிகாரங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ஆளுநர்

மாநில நிர்வாகத்தில் அரசின் தலைவர் ஆளுநர் ஆவார். மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகமானது செயல்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.

சில சமயங்களில் நிர்வாக சூழலின் காரணமாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படலாம்.

ஆளுநர் நியமனம் மற்றும் பணித்துறப்பு | Governor in Tamil

மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம்.

பொதுவாக, ஒருவர் தனது சொந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட மாட்டார். மேலும், அவர் குடியரசுத் தலைவரால் ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு நியமிக்கப்படுவார்.

ஆளுநர் தனது பணித்துறப்பு கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் கொடுப்பதன் மூலம் எந்நேரத்திலும் பதவி விலகலாம்.

ஆளுநரின் பணி நீக்கத்தில் மாநில சட்டமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ பங்கு பெற முடியாது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசு தலைவரால் ஆளுநராக நியமிக்கப்படலாம்.

ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் இரண்டு மரபுகள் பின்பற்றப்படுகின்றன.

1. ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் தான் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரோ அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது. மேலும் ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவரை மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவரது பெயரை முன்மொழிய வேண்டும்.

2. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 158 (3A)-ன் படி ஒருவர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, குடியரசுத் தலைவர் ஓர் ஆணையின் மூலம் ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம்.

ஆளுநராவதற்கான தகுதிகள்

இந்திய அரசியலமைப்பின் 157 மற்றும் 158 வது சட்டப்பிரிவுகள் ஆளுநர் பதவிக்குத்
தேவையான பின்வரும் தகுதிகளைக் கூறுகின்றன.

அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல்
கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.

மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

Governor in Tamil

1. ஆளுநர், மாநில நிர்வாகத்தின் தலைவராக செயல்படுவது மட்டுமல்லாமல் ஏராளமான அதிகாரங்கள் பெற்றவராகவும் திகழ்கிறார்.

2. சட்டப்பிரிவு 163-ன் படி, முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின்
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களைச் செயல்படுத்துகிறார்.

மாநில நிர்வாகத் தலைவராக ஆளுநர் பின்வரும் அதிகாரங்களைப் பெற்று பணிகளைச் செய்கிறார்.

  • மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமனம் செய்கிறார்.
  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை
    நியமனம் செய்கிறார்.
  • மாநிலத்தின் அரசு வழக்கறிஞரை நியமனம் செய்து அவரது ஊதியத்தையும் நிர்ணயம் செய்கிறார். ஆளுநர் விரும்பும் வரை அரசு வழக்குரைஞர் அவரது பதவியைத் தொடரலாம்.
  • மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.

இருப்பினும் ஆளுநரால் இவர்களை பணிநீக்கம் செய்யமுடியாது. குடியரசுத்
தலைவரால் மட்டுமே பணி நீக்கம் செய்யமுடியும்.

  • மாநில தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்து, அவரது பணிக்காலம்,
    பணியின் தன்மையைத் ஆளுநர் தீர்மானிக்கிறார். இருந்த போதிலும், உயர் நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் அதேமுறையைப் பின்பற்றியே மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யலாம்.
  • ஆளுநர் அவர்கள் மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன், துணைவேந்தர்களையும் நியமனம் செய்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் மூலம் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் இவரே மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்யும் பொறுப்பை பெறுகிறார்.
சட்டமன்ற அதிகாரங்கள்

ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார். ஆனால், அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை.

ஆளுநர் பின்வரும் சட்டமன்ற அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.

ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும், சட்டமன்றத்தைக்
கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.

பொதுத் தேர்தல் முடிந்து முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் நியமனத்திற்குப் பிறகு நடைபெறும் சட்டமன்றக்கூட்டத்தின் முதல் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.

நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி
அனுப்பலாம்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்பொழுது
சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.

ஆங்கிலோ – இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு ஆளுநர் நியமனம் செய்யலாம்.

கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து மாநில
சட்டமேலவையின் 6 இல் 1 பங்கு இடங்களுக்கு அவர்களை நியமனம் செய்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை குறித்து தேர்தல் ஆணையத்துடன்
கலந்தாலோசித்து முடிவு செய்கிறார்.

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர்
கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும்.

ஆனால், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக
அனுப்பப்படும் பொழுது ஆளுநர் கையொப்பமிடலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மீண்டும் மறு பரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம்.

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு மசோதாவும் மாநில உயர்
நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நிலையில் இருக்குமாயின்,
அதனைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213-ன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத
பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம்.

ஆனால் அந்த அவசரச்சட்டம், 6 மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்படவேண்டும். அவசரச் சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்பப்
பெறலாம்.

மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை, அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை, அரசின் தணிக்கைக்குழு அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.

நிதி அதிகாரங்கள்

மாநிலத்தின் ஆண்டு வரவு செலவு திட்டத்தினை தயார் செய்து சட்டமன்றத்தில்
அறிமுகம் செய்யும் கடமையை ஆளுநருக்கு அரசியலமைப்பு வழங்குகிறது. தேவைப்பட்டால், துணைவரவு செலவு திட்டத்தையும் அறிமுகம் செய்யலாம்.

ஆண்டு நிதிநிலை அறிக்கையை (வரவு செலவு திட்டம்) சட்டமன்றத்தில் அறிமுகம்
செய்ய காரணமாகிறார்.

மாநில சட்டமன்றத்தில் மாநில நிதியமைச்சர் மூலம் துணை வரவு செலவு திட்டத்தை தேவைப்பட்டால் சமர்ப்பிக்கின்றார்.

ஆளுநரின் முன் அனுமதியுடன் தான் பண மசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.

ஆளுநரின் பரிந்துரையின்றி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது.

அரசின் எதிர்பாராச் செலவினங்களுக்காக ஆளுநர் அவசர நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யமுடியும்.

பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை ஆய்வு செய்ய ஒவ்வொரு
ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிதி ஆணையம் ஒன்றை அமைக்கிறார்.

நீதித்துறை அதிகாரங்கள்

மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்கிறார்.

கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.

உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.

ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.

குற்றவாளிகளின் கருணைமனு அடிப்படையில் குற்றவாளிகளை மன்னிக்கலாம் அல்லது குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம்.

விருப்புரிமை அதிகாரங்கள்

குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி
வைக்கமுடியும்.

மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்கிறார்.

மாநில நிர்வாகம் மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் தொடர்பானச் செய்திகளை
முதலமைச்சரிடமிருந்து ஆளுநர் பெறுகிறார். மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில்
எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறாத போது, ஆளுநர் எந்தக் கட்சி
தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க
முடியாமல் போனால் அமைச்சரவையை ஆளுநர் கலைக்கமுடியும்.

அமைச்சரவை பெரும்பான்மையை இழந்தால், சட்டமன்றத்தை ஆளுநர் கலைக்க முடியும்.

அவசரகால அதிகாரங்கள்

மாநில அரசு அரசியலமைப்பு விதிகளுக்கேற்ப செயல்படவில்லை என்று ஆளுநர் உறுதியாக நம்பினால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ன் கீழ் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைசெய்யலாம்.

மாநில அரசு கலைக்கப்பட்டவுடன், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி
நடைமுறைக்கு வரும்.

ஆளுநர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநிலத்தை நிர்வாகம் செய்கிறார்.

ஆளுநரின் சிறப்புரிமைகள்

சட்டப்பிரிவு 361 (1) ஆளுநருக்கான கீழ்க்காணும் சிறப்புரிமைகளை வழங்குகின்றது.

தனது பணிகள் மற்றும் அதிகாரத்தைச் செய்யவேண்டும் என எண்ணுவதிலும்
செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்கவேண்டிய
அவசியமில்லை.

ஆளுநரின் பதவிக்காலத்தில் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை அவருக்கு
எதிராக எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது.

ஆளுநரின் பதவி காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

மாநில ஆளுநருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளைத் தொடர முடியாது.

Governor in Tamil

ஆளுநர் குறித்து இந்திய அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள விதிகளையும் தகவல்களையும் பற்றி நாம் பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே,

ஆளுநர் சார்ந்த அரசியலமைப்பு சட்ட விதிகள் (Articles Related to Governor)
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 152 முதல் 162 வரை மாநில அரசு மற்றும் மாநில அரசு சார்ந்த நிர்வாக அமைப்பினை பற்றி கூறுகிறது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 152 ➨ மாநில நிர்வாகம் பற்றிய வரையறை

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 153 ➨ மாநிலத்தின் ஆளுநர்கள் பற்றியது

  • ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொறுப்பாக ஒரே ஆளுநர் இருப்பதைப் பற்றி இந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு எந்தவிதமான எதிர்ப்பினையும் கூறவில்லை.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 154 ➨ ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி கூறுகிறது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 154 ( 1)-ன் படி மாநில நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது.

  • அதாவது நேரடியாகவோ அல்லது துணை அதிகாரிகள் மூலம் மறைமுகமாகவோ நிர்வாக கடமையாற்றலாம் எனக் கூறுகிறது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 155 ➨ ஆளுநரின் நியமனம் பற்றியது. இந்த விதியின் கீழ் குடியரசுத் தலைவரால் மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படுகின்றார்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 156 ➨ ஆளுநரின் பதவி காலம் பற்றியது.

  • இந்த விதியின் கீழ் குடியரசுத் தலைவரின் இசைவின் மூலம் ஆளுநர் அவர்கள் பணியில் தொடர முடியும். மேலும் ஆளுநருக்கு தம் பணியை தொடர விருப்பம் இல்லையெனில் குடியரசு தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்கலாம். ஆளுநர் அவர்கள் பதவியில் அமர்ந்த நாளிலிருந்து 5 வருடங்கள் பணியை தொடர முடியும். மேலும், அவருடைய பணிக்காலம் முடிந்த பின்பும் புதிய ஆளுநர் பதவியேற்கும் வரை பதவியில் தொடரலாம்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 157 ➨ ஆளுநராக நியமனம் ஆவதற்கான தகுதிகள் பற்றியது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 158 ➨ ஆளுநர் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலோ அல்லது மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலோ உறுப்பினராக இருக்கக்கூடாது. அவ்வாறு உறுப்பினராக இருப்பின் ஆளுநராக பதவி ஏற்ற நாளிலிருந்து அந்த உறுப்பினர் பதவியானது ராஜினாமா செய்ததாக கருதப்படும். மேலும், ஆளுநர் எந்த ஒரு ஆதாயம் தரும் பதவிகளையும் வகிக்கக் கூடாது என்று கூறுகிறது.

  • ஆளுநர் அவர்கள் அலுவல் ரீதியாக தாம் வசிக்கும் இல்லத்திற்கு எந்தவிதமான வாடகையும் செலுத்த தேவையில்லை. அவருக்கான ஊதியம், படி மற்றும் சலுகைகள் பாராளுமன்ற சட்டத்தால் நிர்ணயிக்கப்படும். இதைப் பற்றிய குறிப்புகள் அரசியலமைப்பு சட்டத்தின் இரண்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • ஒரே நபர் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது ஊதியமும் பிற படிகளும் எந்த விகிதத்தில் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதனை குடியரசுத் தலைவர் அவர்கள் நிர்ணயம் செய்வார். மேலும் அவருடைய படிகளும் ஊதியமும் எக்காரணம் கொண்டும் அவரது பணிக்காலத்தில் குறைக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 159 ➨ ஆளுநரின் பதவிப் பிரமாணம் பற்றியது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 160 ➨ சில எதிர்பாராத நிகழ்வுகளுக்காக ஆளுநரின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது பற்றியது. இதை குடியரசுத் தலைவர் மேற்கொள்வார்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161 ➨ மாநில ஆளுநர் அவர்கள் குற்றவாளிகளின் தண்டனையை ஒத்தி வைக்கவும், தள்ளி வைக்கவும் மற்றும் குறைக்கவும் உரித்தான அதிகாரத்தினை பெற்றிருக்கின்றார் என்று குறிப்பிடுகிறது. எனினும், மரண தண்டனையை முழுமையாக மன்னிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. (இந்த அதிகாரமானது குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு)

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 162 ➨ மாநில அரசின் அதிகாரத்தை அதிகப்படுத்துவது பற்றியது.

சில முக்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள்

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 163 ➨ ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்க முதலமைச்சரின் கீழ் அமைச்சரவை இருக்கும் எனக் கூறுகிறது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 167 ➨ ஆளுநரின் பெயரில் செயல்படும் முதலமைச்சரின் கடமைகள் பற்றியது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 170 ➨ மாநில சட்டமன்ற மக்களவையின் அமைப்பு பற்றியது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 171 ➨ மாநில சட்டமன்ற மேலவையின் அமைப்பு பற்றியது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174 ➨ மாநில சட்டமன்ற அவை கூடும் காலத்தை நீடித்தல் மற்றும் கலைப்பது பற்றியது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 175 ➨ மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் பேசுவதற்கும் மற்றும் அவரின் தகவல்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பற்றியது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 176 ➨ ஆளுநர் சிறப்புரை பற்றியது. சட்டமன்ற முதல் கூட்டத்தொடரின் பொழுது ஆளுநரின் சிறப்பு முதல் உரை சம்மந்தமானது.

துணை நிலை ஆளுநர்கள் (Lieutenant Governor)

துணைநிலை ஆளுநரும் மற்ற மாநிலத்தில் உள்ள ஆளுநரும் சமமான அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.

துணை நிலை ஆளுநர்கள் பொதுவாக அந்தமான் மற்றும் நிக்கோபார், டெல்லி,புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் நியமிக்கப்படுகின்றார்கள். பெரும்பாலும் அவர்கள் மத்திய அல்லது மாநில அரசுகளில் நிர்வாகம் மற்றும் நீதித்துறையில் உயர்ப்பதவி வகித்தவர்கள் ஆவார்கள்.

சர்க்காரியா குழு பரிந்துரைகள்

மத்திய மாநில உறவுகளை ஆராய 1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்க்காரியா குழு இந்திரா காந்தி அவர்களால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சர்க்காரியா குழுவானது ஆளுநர் குறித்து அளித்த பரிந்துரைகளில் முக்கியமானவற்றை நாம் பார்ப்போம் வாருங்கள்…

  • வெளி மாநிலத்தினை சார்ந்தவரே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்.
  • அண்மைக்காலம் வரை அரசியலில் ஈடுபட்டவரை ஆளுநராக நியமித்தலை தவிர்த்தல் வேண்டும்.
  • ஆளுநர் பதவியை வகிக்கின்றவர் ஆதாயம் தரும் எந்த பதவியையும் ஏற்கக்கூடாது என்ற மரபை உருவாக்க வேண்டும் என்று கூறியது.
  • கோப்புகள் பற்றி விளக்கம் பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியது.
  • ஆளுநரை நியமிப்பதற்கு முன் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அவர்கள் நியமிக்கப்படும் மாநிலத்தின் முதல்வரை கலந்தாலோசிக்க வேண்டும்.
  • ஆளுநர் பதவியில் இருந்து விலக்கப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ அதற்கான காரணங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
முடிவெடுக்கும் அதிகாரங்கள்

எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத பொழுது ஆளுநர் தன் முடிவின்படி முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுத்து பெரும்பான்மையினை நிரூபிக்கும்படி வாய்ப்பளிக்கின்றார்.

ஆளுநர் அவர்கள் தன்னுடைய விருப்பத்தின்படி குடியரசுத் தலைவருக்கு மாநில செயல்பாடு குறித்து அறிக்கை அளிக்கின்றார் அல்லது குடியரசுத் தலைவரின் வழிகாட்டுதலின்படி அறிக்கை அளிக்கின்றார்.

அவசர நிலை பிரகடனத்தின் பொழுது அரசியலமைப்பு சட்ட விதி 353 இன் படி குடியரசுத் தலைவரால் அனுமதிக்கப்படும் பொழுது மட்டும் அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையை ஆளுநர் அவர்கள் புறக்கணிக்க முடியும்.

அரசியலமைப்பு சட்ட விதிகள் 160, 356, 357 இன் படி குடியரசுத் தலைவர் அனுமதித்தால் மட்டுமன்றி சிக்கலான சூழ்நிலைகளில் ஆளுநருக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது.

அரசியலமைப்பு சட்டம் பகுதி 6 இன் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பொறுப்பில் இருக்கும் பொழுது அமைச்சரவைக் குழுவின் அறிவுரையின்றி ஆளுநரால் எந்த முடிவும் எடுக்க முடியாது எனக் கூறுகிறது.

இதையும் படிக்கலாமே,

Proverbs in Tamil and English | பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
Thiruvalluvar and Thirukkural History in Tamil | திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றிய முழு தகவல்கள்
GST Full Form in Tamil | ஜிஎஸ்டி பற்றிய முழுமையான விளக்கம் தெரிந்து கொள்ளுங்கள்
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments